புதன், 22 டிசம்பர், 2010

Google

Google
நீ என்று புலப்படுவாய்

உனது மௌனம் எனக்குப் புலப்படாதா என்று
அதன் சூட்சும ஓசையின் ஆழத்தில்
பயணித்தேன்.
உனது மௌன மழையின் இடியோசை
மின்னலோடு என்னில் புதைகிறது.
மௌனம் காக்கும் உன் இதழ்களில்
மௌனம் காக்கும் உன் கண்களில்
உட்புதைந்த பொருள் குறித்து
என் ஆன்மா விடை தேடி அலைகிறது.
உன் மௌனம் எனும்
வெட்டவெளி பரப்பில்
தொலைந்து போனவன் நான்.
என்னை நானே தேடிக் கரைந்தேன்.
உன்னில் நான் அகப்படும் அன்று
நீ எனக்குப் புலப்படுவாயா !

தனுஷ்

ஞாயிறு, 4 ஜூலை, 2010

கவிதை

எனது கடவுள்

எனக்குள் இருக்கும் பிசாசிற்குத்
தீனி நான்தான்
எனக்குள் இருக்கும் கடவுளுக்கு
அருந்தக் கொடுப்பேன்
எனது இரத்தத்தை
இறந்த காலம்
அசைபோடுவதற்கும்
நிகழ்காலம்
அனுபவிப்பதற்கும்
இருக்கும் போது
எதிர்காலம் மட்டும் ஏன்
இருளைப் போர்த்துக் கொண்டிருக்கிறது
என்று கடவுளிடம் கேட்டேன்
அப்போதுதான்
என் இருப்பு உனக்கும்
புரியும் என்றார்
கடவுளின் உருவம்
டிராகுலாவின்
பற்களாக இருட்டில்
இரத்தம் சொட்டியது

தனுஷ்
சுயம்


இறைவனிடம் கேட்டேன்
நான் யார்
அவர் மௌனமாக இரு
என்றார்
அப்படியானால்
மௌனம் நானா
இறைவியிடமும் கேட்டேன்
நான் யார் என்று
அவள் சிரித்தாள்
நானும் இதேக் கேள்வியை
அவரிடம் கேட்டிருக்கிறேன்
அவர் என்னையும்
மௌனமாக இரு என்றுதான் சொன்னார்
என்று ஆர்ப்பரித்துச் சிரித்தாள்
அப்போது அபூர்வமான மலர்கள்
தெய்வீக மணத்தோடு
உலகமெங்கும்
மலையென சொறிந்தன
நான் அந்த மலர்களில் ஒருவனாகக்
மலர்ந்திருந்தேன்
என் மீது மலர்கள் போர்த்து
மறைத்தன

தனுஷ்