வெள்ளி, 16 ஜனவரி, 2009

கவிதையும் வாழ்க்கையும்

கவிதைக்கான மொழி என்பதில் எங்கிருந்து தொடங்குவது. ஒவ்வொரு கவிதையும் அதற்கான சொற்களை எங்கிருந்து எடுத்துக்கொள்கிறது. வெறும் சொற்களின் ஆரவாரம் மட்டும் போதுமா கவிதைக்கு. இது போன்ற கேள்விகள் இல்லாமல் கவிதை எழுதுவது என்பது மிகுந்த அபத்தமாகவே முடிந்திருக்கிறது. கவிதைக்கான மொழி என்பதை எப்படி புரிந்து கொள்வது, அது கவிஞனின் உள்ளத்தில் இருந்து வெளிப்படும் ஒரு லயம். அந்த லயம் சொற்களால் வரையப்படுகிறது. எல்லாச் சொற்களுமே கவிதைக்கான சொற்கள்தாம். கவிதைக்கென தனியே சொற்கள் இல்லை. ஆனால் சொற்களின் அர்த்தம் இங்கே கவிஞனால் தீர்மானிக்கப்படுகிறது. முந்தையக் கவிதைகளின் வடிவத்தில் ஆளாளுக்கு எழுதி எழுதிச் சோர்வடைந்த பின்னர் கவிதைக்கென்ற தனிமவுசு இன்றைய சூழலில் செத்து விட்டது. அந்த மவுசை மீட்டெடுக்கும் கவிதைகள் மட்டுமே வாழும் என்பதை காலம் நமக்கு உணர்த்துகிறது. இன்று புத்தகக் கண்காட்சியில் உயிர்மை அரங்கில் மனுஷ்ய புத்திரனின் நான்கு கவிதைத்தொகுப்புகளை வாங்கினேன். வீட்டுக்குத் திரும்பும் போது இரயில் 'இடமும் இருப்பும்' கவிதைத்தொகுதியில் முதல் கவிதை 'நீலம்' படித்தேன். அந்த ஒரு கவிதை மட்டுமே போதும் யோசிக்க ஒரு மணி நேரத்திற்கு. கவிதை மொத்தம் பதினான்கு வரிகள்தான்.
வாழ்க்கையின் உச்சி, தேடல், அடைய வேண்டிய சிகரங்கள் இவைகளுக்காகவே எல்லா மனிதர்களும் பறந்து கொண்டிருக்கிறார்கள். கவிஞனால் வீட்டைவிட்டு வெளியேற முடியவில்லை. வீடு தாழிடப்பட்டிருக்கிறது. அவனுக்கும் ஆகாயத்தை நோக்கிப் பறக்க ஆசை. அந்த ஆகாயத்தின் நீலத்தில் கரைந்துவிட ஆசை. அதற்கான தயாரிப்பிற்கு தன்னை சுயபரிசோதனை செய்கிறான். கவிஞன் இலட்சியங்களால் வார்க்கப்பட்டவன். அதற்கென அவனுக்கு தனி பாதை தேவைப்படுகிறது. தனது சுயத்தயாரிப்பில் அவனுக்கு கர்வம் இருக்கிறது. இந்த கர்வம் அவனது இயல்பு. இத்தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டது போலவே இந்தக்கவிதை, மனம் கசங்கச்செய்யும் அந்தியின் துயரத்தோடு வெளிப்படுகிறது. கவிதையைப் படியுங்கள்.
நீலம்
ஆகாயத்தை
எட்டிப் பிடித்து விடலாமென்ற
பதற்றமான பறத்தல்களின்
கலவர ஒலிகளை
அமைதியாகக் கேட்டபடியே
தாழிடப்பட்ட இந்த அறையிலிருந்து
உருவாக்கிக் கொண்டிருகிறேன்
சிறிதளவு ஆகாய நீலத்தை
மலையேறும் குழுக்கள்
ஏராளமான சுவடுகளை உதிர்த்தபடி
கொடியேற்றித் திரும்பட்டும்
இன்றிரவுக்குள் வரைந்துவிட மாட்டேனா
என் பாதத்தை
அதன் துல்லியமான ரேகைகளுடன்.
மனுஷ்ய புத்திரன். (1994)
நல்ல கவிதைகளை அடையாளம் காணும் பயணம் தொடரும்.
தனுஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக